Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
திமுக முன்னாள் அமைச்சரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான அர. சக்கரபாணி குறித்து அவதூறான செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி, விகடன் குழுமத்திற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூலை 19-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் தொடர்பான சர்ச்சையில், முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணியை எந்த ஆதாரமும் இன்றி தொடர்புபடுத்தி விகடன் டிவியின் யூடியூப் சேனலில் ஜூலை 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் வீடியோக்களும், ஜூனியர் விகடன் இதழில் பழனி நில சர்ச்சை... சக்கரபாணிக்கு சிக்கல் என்ற தலைப்பில் கட்டுரையும் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை அர. சக்கரபாணி ஏற்கனவே மறுத்திருந்த போதிலும், அவரது விளக்கத்தை வெளியிடாமல் திட்டமிட்டு அவதூறு பரப்பியுள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும், ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையைத் திரும்பப் பெற வேண்டும், விற்கப்படாத இதழ்களை அழிக்க வேண்டும், அடுத்த இதழின் அட்டைப் பக்கத்திலும் இணையதளத்திலும் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு வெளியிட வேண்டும், மேலும் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வழக்கறிஞர் நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், விகடன் குழுமம் மற்றும் சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P