எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறல் - அமெரிக்காவுக்கு ஈரான் புரட்சிகர படை கடும் எச்சரிக்கை
ஈரான், 20 ஜூலை (ஹி.ச.) உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. தெற்கு வழித்தடம் வழியாக செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடிவிபத்துக்குள்ளாகி நடுக்கடலில் சிக்கித் தவிப்பத
எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறல் - அமெரிக்காவுக்கு ஈரான் புரட்சிகர படை கடும் எச்சரிக்கை


ஈரான், 20 ஜூலை (ஹி.ச.)

உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. தெற்கு வழித்தடம் வழியாக செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடிவிபத்துக்குள்ளாகி நடுக்கடலில் சிக்கித் தவிப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இன்று அறிவித்துள்ளது.

தாங்கள் பாதுகாப்பற்றது என்று ஏற்கனவே எச்சரித்திருந்த தெற்கு வழித்தடத்தை இந்தக் கப்பல்கள் பயன்படுத்தியதாகவும், அமெரிக்க ராணுவத்தின் தூண்டுதலின் பேரிலேயே அவை இந்த ஆபத்தான பாதையை தேர்வு செய்ததாகவும் புரட்சிகர படை தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை இந்த நீர்வழிப்பாதை பாதுகாப்பற்றதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள புரட்சிகர படை, இதனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்க ராணுவத்திற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில், தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு தயாராக இருக்கும்படி ஈரான் தரப்பு கூறியுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், இரு வல்லரசுகளுக்கு இடையிலான இந்த மோதல் போக்கு, சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கத்தையும், கடல்வழி வர்த்தகத்தில் தீர்க்க முடியாத நெருக்கடியையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b