Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழகம் முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தடுத்து, உழவர்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடை பருவ நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதால் உழவர்கள் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதோடு கையூட்டு வசூல் உள்ளிட்ட முறைகேடுகளும் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வாங்கப்படுவதாகவும், கூடுதல் எடை மற்றும் பதர் கழிப்பு என்ற பெயரில் மேலும் நெல் பறிக்கப்படுவதால், ஒரு குவிண்டாலுக்கு பணமாக ரூ.150 மற்றும் நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் அதிக விலை கிடைப்பதால் உழவர்கள் அங்கு வருகின்றனர். ஆனால், அவர்களை வாரக்கணக்கில் காத்திருக்க வைப்பதும், கையூட்டு வசூலிப்பதும் பெரும் அநீதி என்றும், இந்த நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்க நேரிடும்; அதனால் நியாயவிலைக் கடைகளுக்கான அரிசி கொள்முதலிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்போது, உழவரிடம் கையூட்டு வாங்கப்பட்டதாக உறுதியான தகவல் கிடைத்ததை சுட்டிக்காட்டிய அன்புமணி, தனிப்பட்ட பணியாளர்களை இடைநீக்கம் செய்வது மட்டும் தீர்வாகாது என்றும், கொள்முதல் நிலையங்களின் அடிப்படை வசதிகள், பணியாளர்களின் ஊதியம், நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் தொழிலாளர்களின் கூலி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை அரசே தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் நெல் கொள்முதல் நிலைய ஊழலை முற்றிலும் ஒழித்து, உழவர்களிடமிருந்து எந்தவித கையூட்டும் பெறாமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ