Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசிய அவர், மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அதில் பங்கேற்றதாகக் கூறினார். போராட்டத்தில் சில ஊடுருவிகள் கலந்து கொண்டதால் அதன் திசை மாறி பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது என்றும், அது வணிகமயமாக்கப்பட்டு பல்வேறு குளறுபடிகள் நிறைந்த தோல்வியடைந்த தேர்வு என்றும் விமர்சித்த அவர், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார். போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும், அரசும் அதனை பொறுமையுடன் கையாள வேண்டும் என்றும் கூறினார்.
மேகதாது அணை கட்டுமானத்தை எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் நிர்மல் குமார் மேகதாது விவகாரத்தில் வேறுபட்ட முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது,
இது த.வெ.க.வின் பிரச்சினை அல்ல; தமிழ்நாட்டின் பிரச்சினை. எனவே அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசித்து ஒருமித்த முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்,
கடந்த ஆட்சியிலும் இதே நிலை இருந்தது; தற்போதும் தொடர்கிறது.
அரசியலில் நாகரிகமான அணுகுமுறை இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P