Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 21 ஜூலை (ஹி.ச.)
தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படமான 'NBK111' படத்தின் படப்பிடிப்பின்போது லேசான காயமடைந்தார்.
இதையடுத்து, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பாலகிருஷ்ணா மற்றும் மஞ்சு மனோஜ் இடம்பெற்ற முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தசை கிழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரசிகர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த நாரா லோகேஷ், பாலகிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசி விபத்து குறித்து கேட்டறிந்ததுடன், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
'வீரசிம்ஹா ரெட்டி' படத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணா–கோபிசந்த் மலினேனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வெங்கட் சதீஷ் கிலாரி தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA