Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 21 ஜூலை (ஹி.ச.)
தேனி மாவட்டம் சின்னமனுார் ஆர்.சி., தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஓடைப்பட்டி கிளையில் கடந்த மே 20 வரை மேலாளராக பணிபுரிந்தார்.
மே 21ல் கூழையனுார் கிளைக்கு மாற்றப்பட்டார். ஓடைப்பட்டி வங்கி கிளை மேலாளராக பொறுப்பேற்ற உன்னிகிருஷ்ணன், நகை கடன்களை தணிக்கை செய்த போது உதயகுமார் என்ற பெயரில் 110 கிராம் தங்க நகைக்கு ரூ.9.45 லட்சம் கடன் வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு பெட்டகத்தில் நகையை தேடிய போது நகை இல்லை. இதுகுறித்து வங்கி மண்டல துணைப் பொதுமேலாளர் இந்திராவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
துணைப் பொதுமேலாளர் இந்திரா, உதவி மேலாளர் ராஜேஷ்குமார் தாஸ், முதுநிலை மேலாளர்கள் அனில்குமார், மருதுபாண்டி ஆகியோர் வங்கியில் சோதனை செய்தனர். கார்த்திக் மேலாளராக இருந்த நாட்களில் வழங்கிய நகை அடகு கடன் விபரங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது 46 வாடிக்கையாளர்களின் பெயரில் நகைகள் இல்லாமல் 114 நகை அடகு கடன் கணக்குகளில் ரூ. 9.64 கோடி வழங்கியது தெரிந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை சேகரித்தனர்.
அப்போது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்த பணம், கார்த்திக்கின் இரு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து கூழையார் வங்கி கிளையில் வழங்கப்பட்டிருந்த நகை அடகு கடன் விபரங்களை சோதனை செய்தனர். அங்கும் 14 வாடிக்கையாளர்கள் பெயரில் நகை இல்லாமல் 18 நகை கடன்களில் ரூ. 1.99 கோடி வழங்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் கார்த்திக் இரு வங்கி கிளைகளிலும் நகைகள் வைக்காமல் ரூ.11.63 கோடி மோசடி செய்தது உறுதியானது.
இது தொடர்பாக வங்கியின் உயர் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கி மேலாளர் கார்த்திக் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக வேறு யாரேனும் செயல்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b