Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழக அரசு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் புதிதாக நூற்றுக்கணக்கான தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த புதிய பேருந்து ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் பேருந்தின் முகப்பு பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்து வண்ணம் பூசப்பட்டுள்ளது. இது அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தை அப்படியே ஒத்திருப்பதால் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அரசு பேருந்துகள் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடி நிறத்தை பயன்படுத்துவது சரியல்ல என்றும், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் பேருந்துகளின் நிறம் தொடர்பாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b