ஓமலூர் அருகே தனியாக வசித்த முதிய தம்பதி கொலை செய்து நகைகள் கொள்ளை - டிஐஜி, எஸ்.பி நேரில் ஆய்வு
சேலம், 21 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்(வயது 85) மற்றும் அவரது மனைவி அமராவதி(வயது 70) தம்பதியினர் வயது முதிர்ந்த தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நகை
ஓமலூர் அருகே தனியாக வசித்த முதிய தம்பதி கொலை செய்து நகைகள் கொள்ளை - டிஐஜி, எஸ்.பி நேரில் ஆய்வு


சேலம், 21 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்(வயது 85) மற்றும் அவரது மனைவி அமராவதி(வயது 70) தம்பதியினர் வயது முதிர்ந்த தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நகைக்காக இவர்கள் இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (ஜூலை 20, 2026), தம்பதியினர் வீட்டில் இருந்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் சரமாரியாகத் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இவர்களுக்குத் தினமும் இரவு உணவு கொண்டு வரும் பேரன் நவனீதன், வழக்கம்போல சாப்பாடு கொடுக்கச் சென்றபோது தாத்தாவும் பாட்டியும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்த நகைகள் மற்றும் மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொலை, கொள்ளை நோக்கத்திற்காக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேலம் சரக டிஐஜி சந்தோஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.

மேலும் தடயங்களை சேகரிக்க கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b