கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கேரளா முழுவதும் உணர்வுப்பூர்வ அஞ்சலி
கேரளா, 21 ஜூலை (ஹி.ச.) மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார். மேலும் கேரள சட்டமன்றத்தில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கேரளா முழுவதும் உணர்வுப்பூர்வ அஞ்சலி


கேரளா, 21 ஜூலை (ஹி.ச.)

மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார்.

மேலும் கேரள சட்டமன்றத்தில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவர் 2025-ம் ஆண்டு தனது 101-வது வயதில் காலமானார்.

சிபிஐ(எம்) கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அச்சுதானந்தன், 1980 முதல் 1992 வரை கேரள மாநிலக் குழுவின் செயலாளராகவும், 1996 முதல் 2000 வரை இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

மேலும் 1992 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும், 2011 முதல் 2016 வரையிலும் என மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

வி.எஸ். அச்சுதானந்தனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புன்னப்பரா - வயலார் போராட்டத் தலைவரான அச்சுதானந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஆலப்புழை வலியச்சுடுக்காட்டில் அவருக்கான நினைவிடம் திறக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தலைமையில் கொடியேற்றமும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜி. சங்கர் இதனை வடிவமைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினர்களான டி.எம். தாமஸ் ஐசக், கே.என். பாலகோபால், சி.எஸ். சுஜாதா, மாநிலச் செயலக உறுப்பினர் சஜி செரியன், மாவட்டச் செயலாளர் ஆர். நாசர், அச்சுதானந்தனின் குடும்பத்தினர் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொது நினைவஞ்சலிக் கூட்டத்தை சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

ஆலப்புழை மற்றும் மாராரிக்குளம் பகுதிக் குழுக்கள் சார்பில் நடைபெறும் பேரணிகள் திருவம்பாடி சந்திப்பில் இருந்தும், அம்பலப்புழை, தகழி மற்றும் குட்டநாடு பகுதிக் குழுக்களின் பேரணிகள் களர்கோடு சந்திப்பில் இருந்தும் தொடங்குகின்றன.

Hindusthan Samachar / vidya.b