பெண் குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் - பாட்டி கைது
ஈரோடு, 21 ஜூலை (ஹி.ச) ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 18 ஆம் தேதி அழகான பெண் குழ
பெண் குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் -  பாட்டி கைது


ஈரோடு, 21 ஜூலை (ஹி.ச)

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 18 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் பிரியதர்ஷினியின் தாயார் தங்கமணி கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த பச்சிளம் குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்ததாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மருத்துவமனையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய தங்கமணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மை வெளியானது.

இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் தனது மகளின் எதிர்காலத்தை காரணம் காட்டி, பச்சிளம் குழந்தையின் கழுத்தை தானே நெரித்து கொலை செய்ததாக தங்கமணி ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாட்டி தங்கமணியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகள் மீதான பாகுபாட்டு எண்ணம் இன்னும் மறையாததன் வெளிப்பாடாக இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b