கரூர் கூட்டநெரிசல் வழக்கு - உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்த வழக்குகள் ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை, 21 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்ட கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் மீதான விசாரணையை, மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. திண்டுக்கல் மாவ
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 21 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்ட கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் மீதான விசாரணையை, மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், விபத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கும் வகையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கையும் மேற்கொள்ளவோ கூடாது என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில்மனு முழுமையாக தயாராகவில்லை என்பதால், தொடர்புடைய மூன்று வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து ஜூலை 27-ஆம் தேதி விசாரிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் பதில்மனுவை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.

விசாரணையின்போது, 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 29 பேர் ஏற்கனவே பணியில் சேர்ந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அனைத்து நியமனங்களும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்று குறிப்பிட்டனர்.

மேலும், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அதே விவகாரத்தில் புதிதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது விளம்பர நோக்கத்திற்காக இருப்பதாகக் கருதப்படலாம் என்றும், இத்தகைய மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதனால், புதிய மனுவையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைத்து ஜூலை 27-ஆம் தேதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam