சென்னை கீழ்பாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல் - 4 பேர் கைது
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) சென்னை கீழ்பாக்கம் நேரு பூங்காவில் நடைபயிற்சி முடித்து வெளியே வந்த தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் (57) என்பவரை, கார் மூலம் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேத்துப்பட்
கைது


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

சென்னை கீழ்பாக்கம் நேரு பூங்காவில் நடைபயிற்சி முடித்து வெளியே வந்த தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் (57) என்பவரை, கார் மூலம் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்த கமலேஷ் ஆபிரகாம், பாரிமுனையில் பாத்திர வியாபாரம் மற்றும் திருநெல்வேலியில் ஸ்கிராப் தொழில் செய்து வருகிறார்.

நேற்று காலை நடைபயிற்சி முடித்து வெளியே வந்தபோது, பெயர் சொல்லி அழைத்த மர்ம நபர்களை தெரிந்தவர்கள் என நினைத்து அருகே சென்றுள்ளார்.

அப்போது துப்பாக்கி இருப்பதாக மிரட்டி, அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

காரில் வைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல், பணம் இல்லை என கூறிய கமலேஷை கத்தியால் மிரட்டி, கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இறுதியில் ரூ.30 லட்சம் தருவதாக அவர் சம்மதித்த நிலையில், உடனடியாக 5 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு, பின்னர் கூறும் இடத்தில் பணம் தருமாறு கூறி நேரு பூங்கா அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் கமலேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பின்னர் கடத்தல் கும்பல் தொடர்பு கொண்டு, பாரிமுனை மின்ட் தெருவில் ஜெய் சரவணன் என்பவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு கூறியது. போலீசார் அறிவுறுத்தலின்படி கமலேஷ் அங்கு சென்றபோது, பதுங்கியிருந்த போலீசார் ஜெய் சரவணனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கமலேஷின் அலுவலகத்தில் பணியாற்றிய ராம்குமார் (23), தொழிலதிபரின் பணப்புழக்கத்தை அறிந்திருந்ததால் நண்பர்களான ஜெயக்குமார் (33), ஜெய் சரவணன் (24), பொன்னி வளவன் (27) ஆகியோருடன் சேர்ந்து கடத்தல் திட்டம் தீட்டியது தெரியவந்தது. கடந்த 10 நாட்களாக கமலேஷின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து, நடைபயிற்சிக்கு வரும் நேரத்தில் வாடகைக் காரில் வந்து கடத்தியதும் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து ராம்குமார், ஜெயக்குமார், ஜெய் சரவணன் மற்றும் பொன்னி வளவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 சவரன் தங்கச் செயின், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam