Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 21 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில், பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்தின் முன்பகுதியில் இன்று காலை திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, வழக்கம்போல் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தது. கோவூர் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
அதன்பின், பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றிய நிலையில், அருகிலிருந்த எரிவாயு நிரப்பும் நிலைய
(Gas Station) ஊழியர்கள் தீயணைப்பு கருவியுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்தில் திடீரென புகை எழுந்து தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam