நீட் தேர்வு முறைகேடு விவகாரம் - பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த மல்லிகார்ஜுன் கார்கே
புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீசிய சம்பவத்தைக் கண்டித்து, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல
கார்கே


புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீசிய சம்பவத்தைக் கண்டித்து, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மாணவர்கள் நீதிக்காக அமைதியான முறையில் போராடிய நிலையில், அவர்களது குரலுக்கு பதிலாக தடியடியும் கண்ணீர்ப்புகை குண்டுகளும் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஜனநாயகத்தின் தாயாகக் கூறிக்கொள்ளும் நாட்டிற்கு பொருத்தமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தச் சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என்றும், வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்றைய நாள் கொண்டாட்டத்திற்கானதல்ல; பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டிய நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு, நாடாளுமன்றம் ஏன் முடக்கப்பட்டது, இணைய சேவை ஏன் நிறுத்தப்பட்டது, தேர்வுத் தாள் கசிவுகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்கு யார் பதில் சொல்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அவர் ஐந்து கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்த வேண்டும், தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பாதுகாப்பான டிஜிட்டல் வினாத்தாள் அமைப்புடன் மாணவர் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை உருவாக்க வேண்டும், கல்வித்துறையை அரசியல் தலையீட்டில் இருந்து விடுவித்து கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், மேலும் தேர்வு முறைகேடுகள் ஏற்பட்டால் கட்டாய மறுதேர்வு மற்றும் இழப்பீடு வழங்கும் சட்டப் பாதுகாப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, நமது குழந்தைகளுக்கு ஒடுக்குமுறை அல்ல, நீதி தேவை என்று மல்லிகார்ஜுன் கார்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P