சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து - 8 பேர் உயிருடன் மீட்பு
புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.) மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகர், பதே நகர், ஜெயில் சாலையில் ரன்பீர் பேக்கரி அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க
சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து - 8 பேர் உயிருடன் மீட்பு


புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.)

மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகர், பதே நகர், ஜெயில் சாலையில் ரன்பீர் பேக்கரி அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பெரும் பதற்றம் நிலவியது. தீயில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து டெல்லி தீயணைப்புத் துறை உதவி கோட்ட அதிகாரி ரவி நாத் கூறுகையில், பதே நகர் ஜெயில் சாலை, ரன்பீர் பேக்கரி அருகே உள்ள ஒரு குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. தீ விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. தீயில் சிக்கியிருந்த 8 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் என்று உறுதிப்படுத்தினார்.

தீ விபத்தின் காரணமாக கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் குடியிருப்புவாசிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b