Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி குறித்த பிரச்சினையை எழுப்ப தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் இரு அவைகளிலும் நோட்டீஸ் அளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இது தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் அந்த நோட்டீஸில் தி.மு.க. குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மேகதாது அணைக்கு விரைவில் பூமி பூஜை நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் தி.மு.க. இந்த நோட்டீஸை அளித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b