Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தாக்கியதோடு, அவர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு மீது குற்றம்சாட்டினார்.
காவல்துறையினருக்கு சமூகத்தில் தனி மரியாதையும் கண்ணியமும் இருப்பதை நினைவில் கொண்டு, உயரதிகாரிகள் பொது இடங்களில் நாகரிகத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் லாக்-அப் மரணங்களால் காவல்துறையின் மீது மக்களிடம் உள்ள நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், காவல்துறையினர் தங்களது ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய், காவல்துறையை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், ஜனநாயகத்தின் முக்கியத் தூணான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ