சுரங்க விபத்தில் 8 பேர் பலி- சிக்கிம் முதல்-மந்திரி தகவல்
நாம்சி , 21 ஜூலை (ஹி.ச.) சிக்கிம் மாநிலம் நாம்சி மாவட்டம் ஜொலுங்கே நகரின் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே பணியில் ஈடுபட்
A


நாம்சி , 21 ஜூலை (ஹி.ச.)

சிக்கிம் மாநிலம் நாம்சி மாவட்டம் ஜொலுங்கே நகரின் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 27 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் அனுபா தம்லிங் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், சிக்கிம் போலீசார், தீயணைப்புத் துறையினர், அவசரகால மீட்புக் குழுவினர், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கேங்டாக்கில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், மற்ற தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தம்மிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்ததாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்ததாகவும் முதல்-மந்திரி கூறினார்.

இதற்கிடையே, சுரங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள வாயுக் கசிவு மீட்புப் பணிக்கு பெரும் இடையூறாக உள்ளது.

வாயுவின் தாக்கத்தால் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மயக்கம், சுயநினைவு இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலச்சரிவின் காரணமாக பூமிக்கடியில் இருந்து இயற்கையாகவே இந்த வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA