Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 21 ஜூலை (ஹி.ச.)
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் போது காயமடைந்த மாணவர்களை ராகுல் காந்தி நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் நோக்கி பேரணியாக சென்ற காங்கிரசார், பிரதமர் இல்லம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA