Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 21 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள் விவகாரத்தில், பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிய இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
மடத்தின் சொத்துக்களைக் காப்பாற்றச் சார்பதிவாளர் பழனிசாமி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தபோதிலும், போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு முறையற்ற வகையில் கிரயம் செய்யப்பட்டுள்ளது. மடத்தின் தக்காராகவும், அப்போதைய இணை ஆணையராகவும் இருந்த மாரிமுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு வந்த பிறகும் சுமார் 70 நாட்கள் எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் செயலாளராக உள்ள குமரகுருபரன் IAS அவர்களின் வழிகாட்டுதல் அல்லது தலையீடு இதன் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் மடத்தின் தக்காரான இணை ஆணையர் நேரடியாகப் புகார் அளிக்காமல், அதிகார வரம்பற்ற நிலங்கள் பிரிவின் கண்காணிப்பாளரைக் கொண்டு புகார் அளிக்க வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும் முக்கிய ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
தற்போது CB-CID விசாரணை நடைபெற்று வரும் சூழலில், பதிவுத்துறையே தனியாக ஒரு குழு அமைத்து விசாரிப்பது முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சியாகும். எனவே, இந்த வழக்கை உடனே CBI விசாரணைக்கு மாற்ற நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.
கடமை தவறியதாகக் குற்றம்சாட்டப்படும் மாரிமுத்து வழங்கப்பட்ட கூடுதல் ஆணையர் (ADC) பதவி உயர்வை ரத்து செய்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்யக் கோரி மாண்புமிகு ஆளுநரிடம் நேரடியாக மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் கோவில் நிர்வாகத்தில் உள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சட்டப்பிரிவைச் சேர்ந்த நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு
(Lie Detector Test) உட்படுத்த வேண்டும். முருகப் பெருமானின் திருக்கோவில் மற்றும் மடத்தின் சொத்துக்கள் எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவற்றை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN