பெரம்பூர் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு
உயர்நீதிமன்றம்


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 1,20,365 வாக்குகள் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 66,650 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

ஆர்.டி. சேகர் தாக்கல் செய்த மனுவில், விஜய் தனது வேட்புமனுவில் முரண்பாடான தகவல்களை அளித்துள்ளதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது தேர்தல் வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்களான முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு இதுவரை நோட்டீஸ் முறையாக சென்றடையவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P