Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச)
மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன், குழுத் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் STEM கல்வி முறையை நோக்கி நகர்ந்தாலும், தமிழ்நாட்டில் STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் கலை, மனிதநேயம், பெற்றோரை மதிக்கும் பண்புகள் ஆகியவற்றையும் இணைத்த கல்வி வழங்கப்படும் என்றார்.
மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்படும் என்றும், நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் சுமந்து சென்ற பொருட்களை விட, பள்ளி மாணவர்கள் அதிக சுமையை சுமக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
புதிய பாடப்புத்தகங்களில் எழுத்துக்களை விட வண்ணப்படங்கள் அதிகமாக இடம்பெறும்.
மேலும், புத்தகங்களில் இடம்பெறும் QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் காணொளிகள் கிடைக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உள்ளீட்டு முறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதற்கேற்ற வகையில் புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட உள்ளன.
இஸ்ரோவின் உதவியுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வகையிலான கல்வி வாய்ப்புகளும் வழங்கப்படும்.
பெண்ணுரிமை, பாலின சமத்துவம், கருணை உணர்வு, நாட்டின் வரலாறு ஆகியவற்றை முன்னிறுத்தும் கல்வி முறையும் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவுடன் இயற்கை நுண்ணறிவையும் வளர்க்கும் வகையில் கல்வித் திட்டம் வடிவமைக்கப்படும் என்றும், ஆசிரியர் நியமனங்கள் முழுமையாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும்,அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்பதற்கென தனி நேரம் ஒதுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறையில் சான்றிதழ்கள், பள்ளி அங்கீகாரம் மற்றும் அனுமதி நீட்டிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மனித தலையீடு இன்றி முழுமையாக ஆன்லைன் முறையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ