Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 21 ஜூலை (ஹி.ச)
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளும் இன்று திறக்கப்பட்டன.
ரியாசி மாவட்டத்தில் கடந்த சில மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
நீர்த்தேக்கத்தில் உள்ள உபரி நீரை வெளியேற்றவும், நீர்மட்டத்தை சீராக பராமரிக்கவும் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் செனாப் ஆற்றில் நீர்மட்டமும், நீரோட்டத்தின் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றின் அருகே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் மழையை முன்னிட்டு வானிலை நிலவரம் மற்றும் ஆற்றின் நீர்மட்டம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், ரஜோரி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், ரஜோரி காவல்துறையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும், திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நீர்த்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.
கனமழை நேரத்தில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், ஆறுகள், ஓடைகள் மற்றும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் அல்லது பாலங்களை கடக்க வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பொது அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர காலங்களில்
உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தையோ அல்லது அவசர சேவைகளையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b