சேலம் அருகே நகைக்காக முதிய தம்பதி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் தீவிர வலைவீச்சு
சேலம், 21 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த ராமப்பக் கொட்டாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் வசித்து வந்த ஜெயராமன் (80) மற்றும் அவரது மனைவி அமராவதி (70) ஆகியோர், வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவ
கொலை


சேலம், 21 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த ராமப்பக் கொட்டாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் வசித்து வந்த ஜெயராமன் (80) மற்றும் அவரது மனைவி அமராவதி (70) ஆகியோர், வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயராமன் மற்றும் அமராவதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர், அமராவதி அணிந்திருந்த ஒரு ஜோடி தங்கத் தோடுகள் மற்றும் இரண்டு தங்க மூக்குத்திகளைப் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களைச் சேகரித்தனர்.

இந்த இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த கொடூர இரட்டைக் கொலை சம்பவம் தீவட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam