திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் உத்தரவு
தேனி, 21 ஜூலை (ஹி.ச.) தேனியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
Sexual assault under false promise of marriage


தேனி, 21 ஜூலை (ஹி.ச.)

தேனியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி எழில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 6ன் கீழ் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 10000ரூபாய் அபராதம், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை வழங்கி உள்ளார்.

மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b