Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் பிரபு, நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு,
சிவாஜி கணேசனின் 25-வது நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அமைச்சர் இங்கு வந்திருப்பதற்கும் நன்றி.
2028-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னின்று நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,
உங்கள் கொள்கைத் தலைவர் காமராஜரின் பக்தரும், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பருமான கலைத்துறையின் பிதாமகன் சிவாஜி கணேசன்.
பாரதியார், வ.உ.சிதம்பரனார், கர்ணன் போன்ற வரலாற்று நாயகர்களை நாங்கள் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களை நம் கண்முன் உயிர்ப்பித்து காட்டியவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா பொன்னெழுத்துக்களால் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அமையும். வரலாறும், சினிமாவும் பெருமை கொள்ளும் வகையில், சரித்திரம் வியக்கும் அளவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக அந்த நூற்றாண்டு கொண்டாட்டம் நடத்தப்படும். இது எங்களுக்கு பெருமை அல்ல,கடமை என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,
பூவுலகம் இருக்கும் வரை ஒவ்வொரு நடிகரின் நடிப்பிலும் ஏதோ ஒரு வகையில் சிவாஜி கணேசனின் தாக்கம் இருக்கும். நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் சிவாஜி. அவரது திரைப்படங்கள் அனைத்தும் காவியங்களும் காப்பியங்களுமாக உள்ளன. அவர் இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று புகழாரம் சூட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ