Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஜூலை (ஹி.ச.)
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நிர்வாகத்தை கவனித்து வந்த அறங்காவலர் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையிலான குழுவினர் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.
இக்குழுவில் துணைத் தலைவராக சண்முகசுந்தரம் மற்றும் குழு உறுப்பினராக ராமையா, பொம்ம தேவன், மணிச் செல்வம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள், ஏற்கெனவே கடந்த முறையும் அறங்காவலர்களாகப் பணியாற்றிய நிலையில், இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் மீதம் உள்ள நிலையிலும் அறங்காவலர் குழு தலைவராக செயல்பட்டு வந்த சத்யபிரியா, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், குழு உறுப்பினர் ராமையா ஆகிய மூவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அறங்காவலர் குழுவினரின் எதிர்பாராத விதமான இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியிலும், கோயில் வட்டாரத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜினாமாவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், நிர்வாக ரீதியிலான கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அறங்காவலர் குழுவினரின் திடீர் ராஜினாமாவை அடுத்து, கோயிலின் அன்றாட நிர்வாக பணிகள் மற்றும் வரவிருக்கும் திருவிழாக்களுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
விரைவில் புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழுவில், இதுவரை மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b