Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
சில மாவட்டங்களில் தினசரி 30 முதல் 50 லிட்டர் வரை பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பாலை அன்றாடம் நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக கொழுப்பு சத்துள்ள ஆரஞ்சு பால் கேட்கும் நுகர்வோருக்கு அதற்கு பதிலாக நீல நிற பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்த நிலையை ஆவின் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் ஒரு லிட்டர் பாலை ரூ.35-க்கு கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.50 வரை வழங்குவதால் ஆவினுக்கு பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், ஆவின் நெய்யின் விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், 500 மில்லி நெய் மற்றும் ஒரு லிட்டர் நெய் பாட்டிலின் விலை உயர்வு பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவில் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் தமிழக முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ