Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட நெற்குன்றம் பல்லவன் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் ஜூலை 27 (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம் மற்றும் பேருந்து நிழற்குடை அருகே இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தினசரி பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்பகுதி மக்களுடன் இணைந்து அதிமுக பலமுறை முறையிட்டதைத் தொடர்ந்து, கடை விரைவில் மூடப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதாக அரசு கூறினாலும், நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள கடை இன்னும் அகற்றப்படாதது வேதனைக்குரியது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 27 காலை 10 மணிக்கு, நெற்குன்றம் என்.டி. பட்டேல் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா தலைமை வகிக்கிறார். திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.
இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P