நீட் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - மத்திய அரசை கண்டித்த ரேவந்த் ரெட்டி
புதுடெல்லி , 21 ஜூலை (ஹி.ச.) நீட்-யுஜி 2026 தேர்வு தொடர்பான முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்
A


புதுடெல்லி , 21 ஜூலை (ஹி.ச.)

நீட்-யுஜி 2026 தேர்வு தொடர்பான முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் மாணவர்களின் குரலை அடக்க மத்திய அரசு போலீஸ் பலத்தை பயன்படுத்துகிறது. மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், உண்மையை எதிர்கொள்ளும் பயத்தை வெளிப்படுத்துகிறது. நீட் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், தேசிய தேர்வு முகமையில் (என்.டி.ஏ.) முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் ‘சலோ பார்லிமென்ட்’ போராட்டத்தை நடத்தினர். மத்திய கல்வி மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும், என்.டி.ஏ. அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

அப்போது போலீசார் அனுமதி மறுத்து மாணவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் சில மாணவர்கள் காயம் அடைந்தனர்,என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA