தேவாதுலா தண்ணீர் வராததால் விவசாயிகள் பாதிப்பு - பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஹரிஷ் ராவ் குற்றச்சாட்டு
ஐதராபாத் , 21 ஜூலை (ஹி.ச.) அமைச்சர் உத்தம் குமார் ரெட்டியின் பேச்சை நம்பி தேவாதுலா திட்டத்தின் கீழ் நாற்று போட்ட விவசாயிகள், தற்போது தண்ணீர் கிடைக்காமல் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ்
A


ஐதராபாத் , 21 ஜூலை (ஹி.ச.)

அமைச்சர் உத்தம் குமார் ரெட்டியின் பேச்சை நம்பி தேவாதுலா திட்டத்தின் கீழ் நாற்று போட்ட விவசாயிகள், தற்போது தண்ணீர் கிடைக்காமல் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-

தேவாதுலா திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததை நம்பி விவசாயிகள் நாற்று தயாரிப்பு பணிகளை தொடங்கினர். ஆனால், தற்போது தேவாதுலா பகுதியில் இருந்து போதிய அளவு தண்ணீர் வராததால், நாற்றுகள் வளர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தேவாதுலாவில் இருந்து 38.16 டிஎம்சி தண்ணீரை உயர்த்தி, 22 நீர்த்தேக்கங்களை நிரப்பி ஒவ்வொரு ஏக்கருக்கும் பாசன வசதி வழங்குவோம் என்று காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால், தேவாதுலா திட்டத்தின் கீழ் எத்தனை நீர்த்தேக்கங்கள் உள்ளன என்பது கூட அமைச்சர் உத்தம் குமார் ரெட்டிக்கு தெரியவில்லை.

நீர் மேலாண்மை குறித்து காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை. தேவாதுலா திட்டம் பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட முக்கியமான திட்டமாகும். அந்த திட்டத்தை பற்றிய அடிப்படை தகவல்கள் கூட காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

காளேஸ்வரம் திட்டம் தொடர்பாக காரணங்களை கூறி வரும் அரசு, தேவாதுலா திட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தி அரசை கேள்வி எழுப்பிய பிறகே அமைச்சர்கள் தேவாதுலா பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, மறுநாளே மோட்டார்கள் இயக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால், 8 நாட்கள் கடந்தும் 10 மோட்டார்கள் கூட முழுமையாக செயல்படவில்லை.

அமைச்சர்கள் சென்ற நாளில் 7 மோட்டார்கள் இயங்கியதாகவும், அடுத்த நாளே அது 5 மோட்டார்களாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் அமைச்சர்களின் பேச்சுகள் பெரிய அளவில் இருந்தாலும், செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இவ்வாறு ஹரிஷ் ராவ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA