திருச்சி சமயபுரம் அருகே அம்மன் கோயிலில் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
திருச்சி, 21 ஜூலை (ஹி.ச.) திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலில் நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கருவறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அம்மனுக்கு சாத்தப்ப
திருச்சி சமயபுரம் அருகே அம்மன் கோயிலில் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை


திருச்சி, 21 ஜூலை (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலில் நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கருவறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி தாலி சரடுகள், சுமார் 7 அடி உயரமுள்ள பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் தங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் கழற்றிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறக்க வந்த பூசாரி, பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து கிராம மக்களுக்கும், சமயபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோயில் வளாகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும், சந்தேக நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b