Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் விமர்சனம் செய்பவர்களையும் கைது செய்வது ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாக மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளுடன் பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்படுவது சர்வாதிகாரப் போக்காக பார்க்கப்படுவதாகவும், அதே நேரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் வழக்குப் பதிவு அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டுவதை திசைதிருப்பும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் மற்றும் அரசை விமர்சித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள் குறித்து அவதூறு கருத்துகள் கூறப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றத்தின் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும், காவல்துறை மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கைது செய்வது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல என்றும் ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையும் தற்போதைய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P