நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், 21 ஜூலை (ஹி.ச.) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராடி வரும் நிலையில், விழுப்புரத்தில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லியை சேர்ந்த கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதர
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்


விழுப்புரம், 21 ஜூலை (ஹி.ச.)

மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராடி வரும் நிலையில், விழுப்புரத்தில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி வளாகத்தின் முன்பு ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மத்திய அரசின் நீட் தேர்வு முறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது ஓய மாட்டோம் ஓய மாட்டோம், நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்படுவதாகவும், எனவே நீட் தேர்வை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் டெல்லி கரப்பான் பூச்சி கட்சி இந்த விவகாரத்தில் எடுத்து வரும் நிலைப்பாட்டிற்கு தங்களது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மாணவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b