Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய வழிகாட்டுதலின்படி,
உடல் உழைப்பை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல், அகழி அமைத்தல் (Trench Cutting) உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு சிறப்புப் பணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் இருந்தால், 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து மண் வேலைகளில் ஈடுபடுத்தலாம். அப்போது, சாதாரண தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியின் 50 சதவீத அளவு மட்டுமே முன் அளவீடு செய்து வழங்கப்பட வேண்டும்.
மண் தொடர்பான பணிகளை தினமும் 4 மணி நேரம் மட்டும் செய்தாலே போதுமானதாகும். முன் அளவீடு செய்யப்பட்ட 50 சதவீத பணியை நிறைவு செய்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேலை அட்டை கோரும் தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 15 நாட்களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்க வேண்டும். வேலை வழங்குவதில் எந்தவித நிபந்தனைகளும் விதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கென தனி மின்னணு வருகைப் பதிவேடு (e-Muster Roll) தயாரித்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (MGNREGS) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.
பணிகளுக்கான முன் அளவீடு மற்றும் இறுதி அளவீடு முறையாக மேற்கொள்ளப்பட்டு, முழு ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குறைகேள் முகாம் நடத்த வேண்டும்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறைகேள் முகாம் நடத்தி, குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளால் முறையாக கண்காணிக்கப்பட்டு, VB-GRAM (G) Scheme 2025 திட்டம் எந்தவித தொய்வுமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ