214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் - விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு
சென்னை, 22 ஜூலை (ஹி.ச) இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
Temple


சென்னை, 22 ஜூலை (ஹி.ச)

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9,205 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சட்டப்பிரிவு 46(III)-ன் கீழ் உள்ள 214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14-ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும், துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை ஜூலை 22 மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் அதிகமான தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 12, 2026 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துறை தெரிவித்துள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இணையதளம், நேரில் அல்லது அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணிக்குள் அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Hindusthan Samachar / P YUVARAJ