Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 22 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கக் கோரி 150-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாசன சங்கத் தலைவர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முதல்வரின் உத்தரவின்படி பழைய ஆயக்கட்டு 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், பின்னர் பேரணியாக சென்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அணையில் தற்போது 50 அடி தண்ணீர் இருப்பும், ஆற்றில் வினாடிக்கு 658 கனஅடி நீர் வரத்தும் உள்ள நிலையில், அதில் இருந்து கூடுதலாக 500 கனஅடி நீரை பழைய ஆயக்கட்டுக்கு திறக்க வேண்டும் என்றும், அது சாத்தியமில்லையெனில் புதிய ஆயக்கட்டுக்குச் செல்லும் ஷட்டரை மூடி பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை பொதுப்பணித்துறை அலுவலகத்தை விட்டு நகரமாட்டோம் என விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam