போகாபுரம் விமான நிலைய திறப்பு விழா - பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு
புதுடெல்லி , 22 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொ
A


புதுடெல்லி , 22 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது, ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது,

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பில் மத்திய மந்திரிகள் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, பூபதிராஜு சீனிவாச வர்மா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லாவு ஸ்ரீகிருஷ்ணதேவராயலு, கலிசெட்டி அப்பலநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையம், வட ஆந்திராவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது.

இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போல, போகாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் வேகமாக வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விமான நிலைய திறப்பு விழா ஏற்பாடுகளை ஆந்திர அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விழா ஏற்பாடுகளை கண்காணிக்க 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜிவிஎம்சி ஆணையர் கேத்தன் கார்க், விஜயவாடா மாநகராட்சி ஆணையர் தியான சந்திரா, ராஜமுந்திரி மாநகராட்சி ஆணையர் ராகுல் மீனா, குண்டூர் மாநகராட்சி ஆணையர் மயூர் அசோக் ஆகியோர் பொதுமக்கள் வசதிகள், தூய்மை பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கவனிக்க உள்ளனர்.

மேலும், இவர்களுக்கு உதவியாக 26 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விஜயநகரம் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள்.

‘அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம்’ என அழைக்கப்படும் போகாபுரம் விமான நிலையம், வட ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA