Enter your Email Address to subscribe to our newsletters

மங்களகிரி , 22 ஜூலை (ஹி.ச.)
‘மனா இல்லு–மனா லோகேஷ்’ திட்டத்தின் கீழ் மங்களகிரி மற்றும் தாடேப்பள்ளி மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கிய ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் நாரா லோகேஷ்,
பின்னர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மங்களகிரி தொகுதி மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள இந்த பேராதரவுதான் தொகுதியின் வளர்ச்சி பணிகளை விரைவாக செயல்படுத்தும் வலிமையை அளித்துள்ளது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.
2019-ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது.
அதன்பிறகு 5 ஆண்டுகள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களின் நம்பிக்கையை பெற்றேன்.
எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சொந்த நிதியில் மருத்துவ சேவைகள், ஏழைகளுக்கு உதவிகள் உள்ளிட்ட 29 மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டேன்.
மங்களகிரி தொகுதியின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.1,800 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் இந்த பணிகள் செயல்படுத்தப்படும்.
மேலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் மேம்பாடு, மூடப்பட்ட அன்னா உணவகங்களை மீண்டும் தொடங்குதல், குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கூட்டணி அரசு வளர்ச்சியையும், மக்கள் நலனையும் இரு கண்களாக கருதி செயல்பட்டு வருகிறது.
‘தல்லிக்கு வந்தனம்’ திட்டத்தின் கீழ் தகுதியான தாய்மார்களின் வங்கி கணக்குகளில் நிதி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் இலவச கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு எம்.பி. பெம்மசானி சந்திரசேகர் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
நிடமர்ரு ரெயில்வே மேம்பால பணிகள் 12 மாதங்களில் நிறைவு செய்யப்படும்.
மங்களகிரி தொகுதி மக்கள் அளித்துள்ள பெரும் ஆதரவுக்கு வளர்ச்சி பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும், மங்களகிரியை மாநிலத்துக்கே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது இலக்கு.
இவ்வாறு அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் தெலுங்குதேசம் கட்சி மூத்த நிர்வாகிகள் நந்தம் அப்பையா, போதினேனி ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA