Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.7.70 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 10 படுக்கை வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மையங்களை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ. அருண்ராஜ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், HDFC வங்கியின் PARIVARTAN சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் அமைக்கப்பட்ட இந்த ஐசியூ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
கடலூர், தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, ஓசூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.70 லட்சம் செலவில், மொத்தம் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் இந்த நவீன ஐசியூ பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் 10 படுக்கைகள், நவீன வென்டிலேட்டர்கள், டெஃபிப்ரில்லேட்டர், ஈசிஜி கருவி, டிஜிட்டல் எக்ஸ்-ரே இயந்திரம், மல்டிபாரா மானிட்டர்கள், சிரிஞ்ச் பம்ப், பைபாப் கருவி, இரத்த வாயு பகுப்பாய்வி (ABG Analyser), சக்ஷன் கருவிகள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் பங்களிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கிட்னி திருட்டு தொடர்பான புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் எந்தவித தலையீடும் இன்றி சட்டப்படி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ