Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் மாதத்தில் பயோமெட்ரிக் (கைரேகை/கண் விழி) பதிவு தோல்வி காரணமாக மாற்று (பிராக்ஸி) முறையில் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
2026 ஜூன் மாதத்தில் மாநிலம் முழுவதும் 3,18,63,609 ரேஷன் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும், அவற்றில் 74,609 பரிவர்த்தனைகள் பயோமெட்ரிக் தோல்வி காரணமாக பிராக்ஸி முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மொத்த பரிவர்த்தனைகளில் 0.23 சதவீதம் ஆகும். மேலும், 49,189 ரேஷன் அட்டைகள் இந்த வகை பரிவர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 12,845 பிராக்ஸி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து தஞ்சாவூர் (3,664), நீலகிரி (3,614), சேலம் (3,247) மற்றும் செங்கல்பட்டு (3,131) மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பிராக்ஸி பரிவர்த்தனைகள் அனைத்தும் உண்மையில் பயோமெட்ரிக் தோல்வி காரணமாக நடைபெற்றவையா என்பதை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையை 2026 ஜூலை 24-க்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தோல்வி பரிவர்த்தனைகளை முடிந்தவரை குறைத்து, பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைரேகை அல்லது கண் விழி பதிவு சரியாக பதிவாகாத சூழ்நிலைகளில், மாற்று (பிராக்ஸி) முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரசு இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ