Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
இமயமலை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் கேசவன் (29). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் தங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி இரவு தனது காதலியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கேசவன் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் நள்ளிரவு வரை கேசவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து மறுநாள் காலை (ஜூலை 21) அதிகளவில் மதுபோதையிலும், கடும் தூக்கக் கலக்கத்திலும் இருந்த கேசவன் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் காதலியின் வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, போதை தலைக்கேறிய நிலையில் அருகிலிருந்த பக்கத்து வீட்டிற்குள் தவறுதலாக நுழைந்துள்ளார்.
அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 48 வயதுடைய பெண்ணிற்கு கேசவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அலறல் சத்தமிட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பகுதி வாசகர்கள், நிலைமையைப் புரிந்து கொண்டு கேசவனை உடனடியாகப் மடக்கிப் பிடித்தனர். அவருக்குத் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், உடனடியாகச் சூளைமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர், நேபாள வாலிபர் கேசவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN