கனிம குவாரிகளுக்கு சலுகை அளிக்கும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 22 ஜூலை (ஹி.ச.) மதுரையைச் சேர்ந்த ஆபெல் மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கனிம வள குவாரிகள் தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த அரசாணை ஒன்று, விதிமீறல்களில் ஈ
கனிம குவாரிகளுக்கு சலுகை அளிக்கும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு


மதுரை, 22 ஜூலை (ஹி.ச.)

மதுரையைச் சேர்ந்த ஆபெல் மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கனிம வள குவாரிகள் தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த அரசாணை ஒன்று, விதிமீறல்களில் ஈடுபடும் குவாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுப்பது, அனுமதிக்கப்பட்ட எல்லையை தாண்டி குவாரி பணிகளில் ஈடுபடுவது போன்ற கடுமையான விதிமீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகளுக்கு மிகக் குறைந்தபட்ச அபராதத் தொகையை மட்டும் விதித்து தப்பிக்க வழிவகை செய்வதாக அந்த அரசாணை அமைந்துள்ளது என்றும், இது போன்ற சலுகை அளிக்கும் அரசாணையால் முறைகேடு செய்பவர்கள் கடுமையான தண்டனைகளில் இருந்து எளிதாக தப்பித்து விடுவார்கள் என்றும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், இயற்கை வளமும் பெருமளவில் சூறையாடப்படும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே சம்பந்தப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், ஏற்கனவே அரசாணை மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.

Hindusthan Samachar / vidya.b