பழைய குற்றாலம் நுழைவு, பார்க்கிங் கட்டண வசூல் ஒப்பந்தம் - விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 22 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், பழைய குற்றாலம் செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலும், வாகன நிறுத்துமிடம் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருப்பதாக
உயர்நீதிமன்றம்


மதுரை, 22 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில்,

பழைய குற்றாலம் செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலும், வாகன நிறுத்துமிடம் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருப்பதாகவும், வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் இல்லாமல் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அயிரப்பேரி ஊராட்சி மன்றம் முறைகேடாக ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை மேற்கொண்டு, ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும், சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று வாதிட்டார்.

விசாரணையின்போது,

நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் ஊராட்சி மன்றம் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறது? அந்த அதிகாரத்தை யார் வழங்கியது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இயற்கை நமக்கு மலைகளையும், மழையையும், அருவிகளையும் வழங்கியுள்ளது.

அந்த இயற்கை வளங்களை பொதுமக்கள் அனுபவிக்க கூட ஏன் இத்தனை கட்டணங்களை வசூலிக்க வேண்டும்? இது பொதுமக்களிடமிருந்து தண்டல் வசூலிப்பதைப் போன்றது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P