Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 22 ஜூலை (ஹி.ச.)
முட்டை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் ரூ.6.80 ஆக நீடித்து வருகிறது.
தமிழகத்தின் முட்டை விலையை நிர்ணயிக்கும் முக்கிய மையமாக உள்ள நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயக் கூட்டத்தில், பண்ணை கொள்முதல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.6.80 என்ற விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இதே விலை நிலவி வருவது பண்ணையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு சத்துணவு திட்டத்திற்கான முட்டை தேவை அதிகரித்துள்ளதாலும், வட மாநிலங்களுக்கான ஏற்றுமதி சீராக இருப்பதாலும் முட்டை விலை இந்த அளவில் நிலைத்து நிற்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் தீவனமான கம்பு, சோயா புண்ணாக்கு விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், தற்போதைய விலை பண்ணையாளர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
இதனிடையே சில்லறை சந்தையில் ஒரு முட்டை ரூ.7.50 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்பதால் முட்டை விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b