Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ள வக்கம்பட்டி பகுதியில் புனித மேரி மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்ப்பவனி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேர் நேற்று இரவு பவனி வந்து கொண்டிருந்த போது, விழாவின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறியதில் தேரை சுற்றி நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பெரும் பதற்றம் நிலவியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலத்த தீக்காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b