Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தரப் பரிசோதனையில் 159 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் தொடர்ந்து தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் தொடர்பான விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு, பொதுமக்கள் விழிப்புணர்விற்காக அதன் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
கடந்த மாத ஆய்வில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 159 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 46 மருந்து மாதிரிகள் மத்திய மருந்து ஆய்வகங்களாலும், 113 மருந்து மாதிரிகள் மாநில மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களாலும் தரநிலைக்கு தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான மருந்துகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ