Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 ஜூலை (ஹி.ச.)
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தொழிலாளர் நலத்துறையின் அதிகாரம் பெற்ற அலுவலர் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,
இது முக்கியமற்ற விஷயமாகத் தோன்றலாம். ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள் என்பதால், அவர்களது பிரச்சனைகளை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
தற்போது தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கையை அரசு உரிய முறையில் ஆலோசிக்கலாம்.
அனைத்து தரப்பு பெண்களுக்கும் ஏற்ற வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், கொள்கை முடிவு எடுக்க பரிந்துரை செய்யும் வகையில் தொழிலாளர் நலத்துறையின் அதிகாரம் பெற்ற அலுவலர் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam