Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஜூலை (ஹி.ச)
டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்ததையும், அவர்களுக்கு ஆதரவாக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரை காவலில் எடுத்ததையும் தமிழக அமைச்சர் கீர்த்தனா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை மேற்கொண்டு கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான செயல் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான முறையில் போராடும் உரிமையையும் பறிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல என்றும், மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை காவலில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 'நீட்' என்பது வெறும் நுழைவுத் தேர்வு மட்டுமல்ல; அது சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் பிரச்சினை என்றும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடர்ந்து நீட் விலக்கை வலியுறுத்தி மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடி வருவதாகவும், மாணவர்களின் நலனில் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் குரலை ஒடுக்குவதற்குப் பதிலாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்வு காண வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்து ஜனநாயக உரிமைகளை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ