Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) நிர்வாகிகள், உறுப்பினர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்லியில் CJP முன்னெடுப்பில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்வது, நீட் விவகாரத்தில் தமிழக ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை, தனக்கு எதிரான போராட்டமாகக் கருதி Sofa Model அரசு அடக்குமுறையில் ஈடுபடுகிறது.
ஜனநாயக முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினரை காவல்துறையை பயன்படுத்தி கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அடக்குமுறையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட SFI மற்றும் DYFI அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஜனநாயக உரிமைகளை மதித்து, போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கருத்துகள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ